சிவகங்கை, சதுர்வேத மங்களத்தில் சுவாமி கும்பிடுவதிலல் இரு தரப்பினர்களுக்கிடையே பிரச்சனையில் பெண்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் நேற்று இரவு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ராவாதாள் எனும் பெண்களால் வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் பொது இடத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் வழிபாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழாவை தடைசெய்ய வலியுறுத்திக் காவல் நிலையம் சென்றனர்.
இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. நள்ளிரவில் ஒரு பிரிவினர், குடியினருக்கும் வீடுகளின் மீது கற்களை வீசியும் மற்றொரு தரப்பினர் கல்வீச்சு, வயல், மோட்டார் செட், வாழை உள்ளிட்டவற்றைச் சேதம் செய்தும், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கியதாகக் கூறப்பட்டது. இதனிடையே ஒரு சமூக பெண்கள் மட்டும் சாமி கும்பிடுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் சேதம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரு தரப்பினர் தற்போது திருப்பத்துார் சிங்கம்புணரி தேசிய நெடுஞ்சாலையில் சதுர்வேத மங்களத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி செல்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நியாயமான முடிவினை எடுப்பதாக உறுதியளித்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.







