பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம்! மணிப்பூரில் பொதுமக்கள் போராட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரத்தை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2…

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரத்தை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவர் மனதிலும் ஆறாத வடுவாய் மாறியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக 657 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அரங்கேறிய இந்த துற்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே கூறியதாவது,

“பெண்களை அவமதிக்கும் வகையிலும் மனிதத்தன்மையற்ற வகையிலும் இந்த கொடூரமான குற்றத்தை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சட்டத்தின்படி அவா்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.