கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ருத்ரமகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி கோயில் அறங்காவலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, அமைதி, மகிழ்ச்சிக்காக மக்கள் கோயிலுக்கு வழிபாடு நடத்தச் செல்லும் நிலையில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என்றார். மேலும் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை. யார் பெரியவர் என பலம் நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன என்றும் வேதனை தெரிவித்தார்.
அதோடு, வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. அதற்கு பதிலாக கோயில்களை மூடிவிடலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதி, திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டும்; சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் காவல் துறை திருவிழாவை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் கோயில் அறங்காவலர் தொடர்ந்த வழக்கையும் முடித்துவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.







