மதுரை எய்ம்ஸ்: ஊதியமாக வழங்கப்பட்டது எவ்வளவு? சுகாதாரத்துறை இணை அமைச்சர் விளக்கம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்காக பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் மூல செலவுகளுக்காக 69.99 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மதுரையில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்காக பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் மூல செலவுகளுக்காக 69.99 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு ஏதேனும் முயற்சி எடுத்துள்ளதா? எனவும் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்தும் தி.மு.க மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்

இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக நடப்பாண்டு ஜூன் மாதம் 7ம் தேதி திட்ட மேலாண்மை ஆலோசகர்  நியமனம் செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பும் ஒப்பந்தத்திற்கு முன்னதாக முடிக்கக்கூடிய பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இதற்காக 12.35 கோடி மத்திய அரசு இதுவரை ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் மூலதன செலவு ஆகியவற்றிற்காக மொத்தமாக 69.99 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது.

இவ்வாறு மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.