பள்ளியில் மதமாற்ற புகார் தொடர்பாக வரும் 20-ம் தேதி தலைமைச் செயலாளர், ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோனஹன் மகளிர் பள்ளியில் மதமாற்றம் நடப்பதாகவும், மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார்கள் வந்ததாக கூறி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இதுதொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தி, 85 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியது.
இதனையடுத்து, சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், உறுப்பினர்களுடன் சென்று நேற்று சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
அந்த கடிதத்தில், ‘சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பதிவு செய்யப்படாத குழந்தை பராமரிப்பு நிறுவனம் சட்டவிரோத மதமாற்றம் மற்றும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அனுப்பப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் அந்த விடுதியில் இருந்து சிறுமிகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவின் முன் ஆஜர்படுத்துமாறும், அது தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இதுவரை உங்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சி.பி.சி.ஆர். சட்டம் 2005-ன் பிரிவு 13, 14-ன் கீழ் செயல்பாடு மற்றும் அதிகாரங்களை பின்பற்றும் ஆணையம், இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களுடன் வருகிற 20-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைன் வழியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அப்போது அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏன்? ஆணையம் அனுப்பிய புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் எவை? ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







