உறவினர்களை தாக்கிய ஆயுதப்படை காவலர் மீது புகார்

சேலம் அருகே, மதுபோதையில், தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், அடியாட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக ஆயுதப்படை காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாயவன். இவர், ஆயுதப்படையில்…

சேலம் அருகே, மதுபோதையில், தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், அடியாட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக ஆயுதப்படை காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாயவன். இவர், ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மதுபோதையில் அவர், தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை, அவரது உறவினர்களான அருண்குமார், அசோக்குமார் ஆகியோர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாயவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், இரவில், கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்த அவர், அருண்குமார் மற்றும் அசோக்குமார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மாயவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே, அருண்குமாரும், அசோக்குமாரும் தம்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, மாயவனும் அதே மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.