9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டவர்களில் 57 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
தொடக்கம் முதலே திமுக பல இடங்களில் வெற்றிப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. அதேபோல் அதிமுக, பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக 169 பேர் போட்டியிட்டனர் அதில் 57 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுயேட்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின்போது விஜய் படம் பதிக்கப்பட்ட கொடியினை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் கருபடித்தட்டை காந்தி நகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் இயக்க நகர செயலர் பிரபு 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









