சிங்கப்பூரில் உள்ளதைப் போன்று நாடு முழுவதும் விரைவில் 790 உணவுச் சாலைகள் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நமது நாடு சாலை உணவுகளுக்குப் பெயர்போனது. எனினும், இந்த சாலை உணவகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செயல்படக்கூடியவை.
இவ்வாறு இல்லாமல் ஒரு சாலை முழுவதும் உணவகங்களாகவும், அங்கு விநியோகிக்கப்படும் உணவுகளை தெருக்களில் போடப்படும் மேசை நாற்காலிகளில் அமர்ந்து உண்ணும்படியும் இருந்தால் எப்படி இருக்கும்?
இத்தகைய முறையே உணவுச் சாலைகள் எனப்படுகின்றன. இதுபோன்ற உணவுச் சாலைகள் உலகின் பல நாடுகளில் – குறிப்பாக மாநகரங்களில் -உள்ளன.
பாகிஸ்தானின் லாகூரிலும் கூட இதுபோன்ற உணவுச் சாலைகள் உள்ளன.
எனினும், சிங்கப்பூரில் உள்ள உணவுச் சாலைகள் உலகப் புகழ்பெற்றவை. யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்றவை.
அத்தகைய தரத்தில் உணவுச்சாலைகளை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அது குறித்த ஒளி ஒலி காட்சியை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போட்டுக் காண்பித்துள்ளது.
வியந்துபோன நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்திற்கு மிகுந்த ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் தற்போது பிரதமர் அலுவலகத்தின் ஆய்வில் உள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் ஆய்வுக்குப் பிறகு ஆண்டுக்கு 158 உணவுச்சாலைகள் என 5 ஆண்டுகளில் 790 அங்கீகரிக்கப்பட்ட உணவுச் சாலைகள் நாடு முழுவதும் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக ஒரு உணவுச்சாலைக்கு ரூ. 50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.395 கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதோடு, இந்த உணவுச் சாலைகளை கண்காணிக்க கூடுதலாக ரூ. 19.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உணவுச்சாலைக்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒதுக்கும் என்றும், மீதமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசுகள் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுச் சாலையில் உணவகம் நடத்தும் ஒவ்வொருவரும் அதற்கான ஒதுக்கீட்டை பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் அதனை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் செயலர் ஏற்பார் என்றும், உணவுச் சாலைக்கான இடத்தை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு உணவுச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.










