கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது – இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பொதுமக்களிடம் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த பண…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பொதுமக்களிடம் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியாவில் கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா? குறைந்துள்ளதா?
என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கியால் கண்டறியப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளின் மதிப்பின்படி 2016-2017ம் நிதி ஆண்டில் 43.47 கோடி ரூபாய்க்கான போலி நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2021-22ம் நிதி ஆண்டில் 8.26 கோடி ரூபாயாக கள்ள நோட்டு புழக்கம் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2016-17ம் நிதி ஆண்டில் கண்டறியப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 43,46,75,710 ரூபாய் ஆகும். இதேபோல் 2017-18ம் நிதி ஆண்டில் 23,34,91,965 ரூபாயும், 2018-19ம் நிதி ஆண்டில் 8,23,59,960 ரூபாயும், 2019-20 நிதி ஆண்டில் 7,48,03,650 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், 2020-2021ம் நிதி ஆண்டில் 5,45,00,125 ரூபாயும், 2021-22ம் நிதி ஆண்டில் 8,25,93,565 ரூபாயும் ரிசர்வ் வங்கியால் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளில் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களுக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் உண்டாக்கப்பட்டன. ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கும், கள்ள ரூபாய் நோட்டுகளுக்கும் வித்தியாசத்தை மக்கள் எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் வித்தியாசங்கள் தொடர்பான குறிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி இணையதள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.