வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்…. இந்த பொங்கலோட ரியல் வின்னர் யாரு?

வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் திரைப்படங்களின் விரிவான விமர்சனம்..

பொங்கலுக்கு வந்துள்ள கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவன் தலைவர் தம்பி தலைமையில் படங்கள் எப்படி இருக்கிறது. இந்த படங்களின் பிளஸ், மைனஸ் என்ன? இதோ விரிவான விமர்சனம்..

வா வாத்தியார் :

ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பில், சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன்குமரசாமி இயக்கத்தில், கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்திஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வந்துள்ள படம் வா வாத்தியார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறந்த நேரத்தில் பிறந்த தனது பேரனுக்கு ராமு என்று பெயரிட்டு, அவரையும் எம்ஜிஆர் ரசிகராகவே வளர்க்கிறார். ஆனால், கார்த்திக்கோ பணத்தின் மீது ஆசை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி தவறான வழிகளில் பணத்தை சம்பாதிக்கிறார். கார்ப்பரேட் வில்லன் சத்யராஜ் ஆதரவாக செயல்படுகிறார். ராஜ்கிரண் இறந்தநாளில் ஒரு அதிசயம் நடக்கிறது. எம்ஜிஆரின் ஆன்மா கார்த்தி உடலில் இறங்கி, அவர் பாணியில் தவறு செய்பவர்களை பின்னி எடுக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது. வில்லன்களுக்கு என்ன ஆனது என்பது தான் வா வாத்தியார் படக்கதை.

பேன்டஸி, காமெடி கலந்த கமர்ஷியல் படமாக படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். தனக்கே உரிய பாணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும், எம்ஜிஆர் ஆன்மா வந்தவுடன் வெள்ளைக்குதிரையில் எம்ஜிஆர் கெட்அப்பில் சென்று எதிரிகளை பந்தாடுகிற சீன் விறுவிறுப்பு. அவருக்கும், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டிக்குமான காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அது கலர்புல். குறிப்பாக, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ரீ மேக் பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

கிளைமாக்ஸ்க்கு முன் ஒரு நீண்ட சண்டையில் எம்ஜிஆர் கெட்அப்பில் ஏகப்பட்டபேரை பிரித்து மேய்கிறார். ராம, ராமசந்திரன் ஆக அவர் மாறுகிற சீனும் நடிப்புக்கு நல்ல உதாரணம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கதையில் கனெக்ட் செய்திருப்பது புத்திசாலிதனம். மஞ்சள் முகம் என்ற டீம், அவர்கள் செய்கிற வேலைகள், அவர்களுக்கு கார்த்தி உதவுவது ஆகியவை விறுவிறுப்பு.

ஹீரோயினாக வருகிற கீர்த்திஷெட்டி ஸ்டைலாக, அழகாக வருகிறார். பாடல்காட்சியில் மனதில் நிற்கிறார். வில்லனாக வருகிறார் சத்யராஜ். ஆனாலும் அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். பாசக்கார தாத்தாவாக ராஜ்கிரண் வரும் காட்சிகள், எம்ஜிஆர் குறித்த அவர் பேசுகிற காட்சிகள் நல்ல பீலிங். சத்யராஜ் மகளாக வருகிற ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ்திலக், கருணாகரன் ஆகியோர் குறைவான சீனிலேயே வருகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் பாடல்காட்சிகள், பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்கிறது. பொதுவாக நலன் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும். இந்த படத்தில் அது குறைவு. எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகள், சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு ஒட்டாமல் இருக்கலாம். அந்த கான்செப்ட் இன்னும் அழுத்தமாக, உயிரோட்டமாக இருந்து இருந்தால் படம் இன்னும் பெரிய ஹிட்டாகி இருக்கும்.

தலைவர் தம்பி தலைமையில்:

பஞ்சாயத்து போர்டு தலைவராக இருக்கும் ஜீவாவிற்கு ஒரு வித்தியாசமான பிரச்னை அல்லது ஈகோ மோதல். மறுநாள் தனது வீட்டில் நடக்க உள்ள மகள் பிரார்த்தனா திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார் இளவரசு. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பிராமையா அப்பா திடீரென இறந்துவிடுகிறார். மறுநாள் 10.30 மணிக்கு என் மகளுக்கு திருமணத்தை வீட்டில் நடத்துவேன் என இளவரசு அடம் பிடிக்க, அதே நேரத்தில் என் அப்பாவின் இறுதி ஊர்வலம் நடக்கும், அவரை தேரில் எடுத்து செல்வேன் என தம்பிராமையா எகிற, இவர்களுக்கு இடையில் சிக்கி தவிக்கிறார் ஜீவா. மறுநாள் என்ன நடந்தது? என்பதை பக்கா காமெடி பாணியில் சொல்லும் படம் தலைவர் தம்பி தலைமையில்.

ஏற்கனவே ஈகோ பிரச்னையில் பிரிந்து இருக்கிற இரண்டு குடும்பங்கள், இன்னொரு புது பிரச்னையால் இன்னும் சண்டைபோட, அவர்களை சமாதானப்படுத்துகிற பஞ்சாயத்து போர்டு தலைவராக சிறப்பாக நடித்து இருக்கிறார் ஜீவா. அவருக்கு கதைப்படி ஜோடி இல்லை. லவ், டூயட் சாங் இதெல்லாம் இல்லை. ஆனாலும், கதையை நம்பி, தனது கேரக்டரில் முத்திரை பதித்து இருக்கிறார். அந்த பத்தரை மணியை மாத்த முடியுமா என்று இரண்டு குடும்ப உறுப்பினர்களிடம் அவர் பேசுகிற அழகே தனி. புதுசு, புதுசாக பிரச்னைகள், நபர்கள் வர, அவர்களையும் சமாளிக்கிறார். கிளைமாக்சில் ஒரு அதிரடி சம்பவம் நடக்க, அடுத்து இரண்டு குடும்பத்தை பார்த்து அவர் பேசுகிற டயலாக் செம. ஜீவாவுக்கு ஒரு வெற்றிபடமாக அமைந்துள்ளது.

திருமணம் நடத்துகிற வீட்டுகாரராக இளவரசும், தந்தை இறந்த சோகத்தில் தவிப்பவராக தம்பிராமையாவும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்து சண்டைபோடுவதும், நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா என்று எகிறுவதும் நல்ல சீன்கள். மண மகளாக வரும் பிரார்த்தனா கேரக்டர், அவர் காணாமல் போவது, குடும்பத்தினரிடம் உணர்ச்சிகரமாக பேசுவது படத்துக்கு பிளஸ். இவர்களை தவிர, மாப்பிள்ளையாக வருபவர், அவர் தம்பி, மாப்பிள்ளை குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட சீன்கள் வெகு எதார்த்தம், நல்ல சிரிப்பை தருகிறது. மணப்பெண்ணை காதலிக்கும் ஒரு ஆர்வ கோளாறு பார்ட்டி செய்கிற செயலும் நல்ல காமெடி.

ஜீவா எதிரணி ஆளாக வந்து குடைச்சல் கொடுக்கிறார் ஜென்சன் திவாகர். அவரின் பேச்சு, பாடிலாங்குவேஜ், அவர் செய்கிற சம்பவங்கள் பக்கா. இப்படி அவ்வப்போது புதுப்புது கேரக்டர்கள் படத்திற்குள் வந்து லந்துகொடுக்கிறார்கள். ஒரே நாள் இரவில் கதை நடக்கிறது. திரைக்கதையும், வசனங்களும், ஒவ்வொரு கேரக்டரின் நடவடிக்கை, பில்டப்பும் படத்தை அழகாக்கி, ரசிக்க வைக்கிறது. சண்டை, ஈகோ படமாக இருந்தாலும் காமெடி நன்றாக வொர்க்அவுட் ஆகி இருக்கிறது.

குறிப்பாக, அரை மணி நேர கிளைமாக்ஸ் அப்படியொரு தரமான சம்பவம். படத்தில் பிரமாண்ட தண்ணீர் தொட்டி முக்கிய கேரக்டராக வருகிறது. அதுவும், நாட்டு வெடிகுண்டு ஏற்படுத்துகிற பாதிப்பு, அதனால் அடுத்து நடக்கும் விஷயங்கள் குலுங்க, குலுங்க சிரிக்க வைக்கின்றன. மலையாளத்தில் பாலமி என்ற வெற்றி படத்தை கொடுத்த நிதிஷ் சஹதேவ் இந்த படத்தை இயக்கி, வெற்றி படமாக கொடுத்து இருக்கிறார். கண்ணன் ரவி தயாரித்து இருக்கிறார். இந்த பொங்கலுக்கு காமெடி விருந்தாக வந்து இருக்கிறது தலைவர் தம்பி தலைமையில்.

சிறப்பு செய்தியாளர்: மீனாட்சி சுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.