சென்னையில் வன்ணமீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத்திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வண்ண மீன் வளர்ப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தினை விளக்கிடும் வகையில் சென்னையில் வண்ண மீன் கண்காட்சி நடத்தப்படும். மேலும் பொதுமக்கள் உடல்நலனின் மீன் உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீன் உணவுத்திருவிழாவும் நடத்தப்படும் என அறிவித்தார்.
மதுரை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தக மையம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும், சென்னை மாதவரம் பகுதியிலுள்ள மணலி மர்றும் மாத்தூர் ஏரிகளை சீரமைத்து மீன்பிடிப்புடன் கூடிய பொழுதுபோக்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
மேலும், கடலில் மீன்பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட 33 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.








