80களில் கதாநாயகர்களின் நண்பன் கதாபாத்திரங்களில் கோலோச்சிய சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்.
பாலசந்தர் இயக்கிய பட்டினபிரவேசம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சரத்பாபு. உணவகம் நடத்திவந்த சரத்பாபுவின் தந்தை தனது மகனும் அதே தொழிலில் முன்னேற வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் சரத்பாபுவின் மனதில் வேறு எண்ணம் இருந்தது. காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் அழகான இளைஞனான சரத்பாபுவிடம் நீங்கள் சினிமாவில் நடித்தால் என்ன? என பலரும் கேட்க, அதுவே அவர் வாழ்க்கை பயணமாகிப்போனது.
பட்டினபிரவேசத்தில் அறிமுகமான சரத்பாபு மீண்டும் அதே இயக்குநர் இமயம் பாலசந்தர் இயக்கி 1978 ஆம் ஆண்டு வெளியான நிழல் நிஜமாகிறது படத்தில் கமல்ஹாசனனின் நண்பராக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு கனமான கதாபாத்திரம். திருமணத்தை வெறுக்கும் நாயகியின் சகோதரனாக தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
அதே ஆண்டு மஹேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் சரத்பாபுவின் திரைப்பயணத்தை வேறு திசைக்கு மாற்றியது. இஞ்சினியர் குமரனாக அவர் நடித்த ’செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடல் இன்றும் அவர் நினைவுகளை மலரச் செய்துகொண்டிருக்கின்றன.
நாயகன் ரஜினிக்கு பிடிக்காத ஆளான சரத்பாபுவை ரஜினியின் தங்கை விரும்பும் கதை. நடிப்புக்குத் தீனிபோடும் கதையம்சம் கொண்ட படத்தில் தன் பங்கை சரிவிகிதமாக பறிமாறி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சரத்பாபுவின் முக்கிய வெற்றிப்பயணம் அது.
சட்டம் படத்தில் படத்தில் கமலுக்கு நண்பன் ரவியாக, வேலைக்காரன் படத்தில் ரஜினியின் முதலாளி ராஜ்குமாராக, அண்ணாமலையில் ரஜினியின் நண்பனாகவும் எதிரியாகவும் அஷோக் எனும் கதாபாத்திரத்தில் , முத்து படத்தில் ஜமீந்தார் மலையசிம்மனாக என சரத்பாபு மெருகேற்றிய கதாபாத்திரங்களின் பட்டியல் நீளும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சரத்பாபு கடந்தமாதம் உடல்நலக்குறைவால் ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இந்த 80 களின் நண்பன் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார். இருந்தாலும் இந்த செந்தாழம்பூவில் வந்தாடிய தென்றல் நம் மீது மோதிக்கொண்டே இருக்கும்.
– சா.அன்சர் அலி







