கோவை: டாஸ்மாக் பார் காசாளர் கொலை வழக்கில் உறவினரே குற்றவாளியாக காரணம் என்ன?

கோவை அருகே டாஸ்மாக் பார் காசாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.   கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம்…

கோவை அருகே டாஸ்மாக் பார் காசாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

 

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அதன் அருகே பாரும் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கண்டணப்பட்டியை சேர்ந்த 28 வயதான காளையப்பன் என்பவர் காசாளராக கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல், காலை காளையப்பன் பாரில் சமையலில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாருக்குள் நுழைந்த 6 பேர் கும்பல், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காளையப்பனை சரமாரியாக வெட்டினர்.

 

இதில் அவருக்கு 16 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பாரில் இருந்த சக ஊழியர்கள் கொடுத்த தகவலின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பார் ஊழியரை கொலை செய்தவர்களை பிடிக்க மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

அங்கிருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை கைப்பற்றி தனிப்படையினர் ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். முதலில் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம், காளையப்பன் பற்றியும், அவரது உறவினர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த உருவங்களை கொண்டு கொலையாளிகளை தேடி வந்தனர். காளையப்பனை கொலை செய்ததாக, அவரது உறவினரான சிவகங்கையை சேர்ந்த 39 வயதான ராஜகண்ணப்பன் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

 

பார் உரிமையாளர் ராஜகண்ணப்பணும், காளையப்பனும் உறவினர்கள். ராஜ கண்ணப்பன் திருப்பூரில் தங்கி 11 டாஸ்மாக் பார்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரை காளையப்பன் வாடகைக்கு எடுத்து நடத்தியுள்ளார். வியாபாரமும் நன்றாக சென்றுள்ளது. ராஜகண்ணப்பன் கேட்ட வாடகையையும் அவர் கொடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில், வியாபாரம் சற்று குறைந்ததால் டாஸ்மாக் பாருக்கான வாடகையை குறைக்குமாறுகாளையப்பன், ராஜகண்ணப்பணிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. காளையப்பன் கடையை விட்டு மீண்டும் சொந்த ஊருக்கே சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரில்
ஜல்லிக்கட்டு திருவிழா நடந்த நிலையில் அந்த திருவிழாவுக்கு ராஜகண்ணப்பனும் வந்திருந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த காளையப்பன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்த தகவல் ராஜகண்ணப்பனுக்கு தெரியவந்துள்ளது.

 

தன்னை தீர்த்து கட்ட முடிவு செய்த காளையப்பனை நாம் முந்தி கொண்டு, தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்து, கூலிக்கு ஆட்களை அழைத்து கொண்டு, சம்பவத்தன்று 2 மோட்டார் சைக்கிளில் சிறுமுகைக்கு வந்து காளையப்பனை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவருடன் வந்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.