“அன்பே சிவம், உள்ளமே கோயில்” என்றெல்லாம் நாம் சாதாரணமாக பேசக் கேட்டிப்போம். அதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் திருமூலர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருமூலர், பதினெண் சித்தர்களில் ஒருவர். அவர் எழுதிய பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான திருமந்திரம், 232 அதிகாரங்களும், 3100 செய்யுட்களையும் கொண்டுள்ளது. அன்பே சிவம், சிவமே அன்பு என்றுரைக்கும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாக போற்றப்படுகிறது.
வாழ்க்கை நெறி, பக்தி வழி
வாழ்க்கை நெறியையும், பக்தி வழியையும் கற்றுத் தரும் திருமந்திரத்தையும், அதன் பொருளையும் எடுத்துரைக்கும் தொடர் தான் இந்த “நவில்ஓம் திருமந்திரம்“. திருமூலர் அருளிய திருமந்திரத்தின் செய்யுட்களை எடுத்துக் கூறி, அதன் பொருள் உரைக்கப்படும். இன்று நாம் பார்க்க இருக்கும் திருமந்திரம் இதோ…
“ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே”. (திருமந்திரம் 107)
பொருள் – உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் , உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதம் பார்க்காமல் யாருக்கும் எந்த வேறுபாடுமின்றி உணவிட வேண்டும். விருந்துண்போர் மகிழ்ந்துண்டு செல்லும் வகையிலும், வரும் விருந்தினரைப் போற்றியும் உண்ண வேண்டும். உணவைச் சமைத்துப் சாப்பிட வேண்டும். பழைய பொருட்களை உண்ணக் கூடாது. அதே நேரத்தில் தமிழ் மக்கள் விரும்பிச் சாப்பிடும் பழஞ்சோறும், பதஞ்செய்து சாப்பிடும் நல்ல உணவு வகைகளும் இதில் பொருந்தாது. பசி வேட்கையுடன், விரைந்து சாப்பிடுதல் கூடாது.
ஆர அமர சாப்பிடுங்கள்
ஆர அமர இருந்து, நன்றாய் மென்று சாப்பிட வேண்டும் என்று உரைக்கிறார். காகமானது விருந்தினர் அழைத்து உணவு வைக்கும் போது கரையும், ஆனால் எடுத்துச் சென்று சாப்பிடும் போது கரைந்து அழைக்காது. அதுபோல் காலம் அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார் “அறம் செய்வான் திறம்” என்ற தலைப்பிலான இந்த மந்திரத்தில்.
நாளை வேறு ஒரு திருமந்திரத்தைப் படித்தறிந்து, அதன் பொருளறிவோம்.
-நீலாபிள்ளை







