கோவையில் சமூக அமைதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து மதத் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
கோவையில் கடந்த மாதம் கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் FORUM FOR PEACE AND HARMONY என்ற அமைப்பினர், கோவை பந்தய சாலையில் உள்ள தேவாலயத்தில், அனைத்து மதத் தலைவர்களும் கலந்து கொண்ட மத நல்லிணக்க கூட்டுப் பிரார்த்தனையை நடத்தினர்.
அதன் முடிவில் அமைதியை மேம்படுத்தும் அடையாளமாக வெள்ளை நிற பலூன்களை வானில் பறக்கவிட்டனர். அப்போது பேசிய மதத் தலைவர்கள், மனிதநேயத்தையும் அன்பையும் வளர்ப்பதே சமூக அமைதிக்கான வழி என வலியுறுத்தினர். நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் மூலமே ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய கௌமார மாதாலயத்தைச் சேர்ந்த குமரகுருபர சுவாமிகள் அமைதி மற்றும் உரிமைகளை வலியுறுத்தினார். 1,330 திருக்குறள்களின் மூலம் திருவள்ளுவர் வழங்கிய நல்ல கருத்துக்களை பரப்ப வேண்டும் எனவும் அனைவரும் இணைத்து சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ரபிதத்துல் உலமா ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முகம்மது இஸ்மாயில் இம்தாதி, “பன்முகத்தன்மையை உறுதிப்படுத்த சமூகத்தின் கலாச்சாரத்தை நாம் மதிக்க வேண்டும் மற்றும் பாதுகாக்க வேண்டும். குரானின்படி மனிதநேயத்தையும் மனிதத்தையும் மீறும் விஷயங்களில் ஆன்மீகம் இல்லை” எனக் குறிப்பிட்டார்.







