ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்த விவகாரம் – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்தது 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என காவல் துறை விசாரணை மூலம் அறிந்தோம்.  அது தேர்தல் நடத்தை விதிமீறல் கீழ் வராது என…

ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்தது 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என காவல் துறை விசாரணை மூலம் அறிந்தோம்.  அது தேர்தல் நடத்தை விதிமீறல் கீழ் வராது என கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் அது தேர்தல் நடத்தை விதிமீறலின் கீழ் வருமா என்பதை உறுதி செய்ய,  தேர்தல் அதிகாரியான கோவை ஆட்சியர் வீடியோ குறித்து ஆராய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் கூறியதாவது:  “ஒரு காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும்,  கோவை ஆட்சியர்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று,  ‘என் மன் என் மக்கள்’ யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.

அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக,  ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் உள்ளது.  தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.  பிறரைப் போல,  பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.

உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, ஆட்சியர் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

இந்த நிலையில் அது 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என காவல் துறை விசாரணை மூலம் அறிந்தோம்.  அது தேர்தல் நடத்தை விதிமீறல் கீழ் வராது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/CollectorCbe/status/1773735041170116629?t=QIn4MgQnxD4WNC2r_Uar0A&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.