கோவை சரக டிஐஜி விஜயகுமார் உயிரைமாய்த்துக் கொண்ட வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகியுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார். இதனை அடுத்து டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், டிஐஜி விஜயகுமார் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை இறுதி மரியாதை நிகழ்வில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் பங்கேற்றார். அதோடு 6 கி.மீ தூரம் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்த ஐ.ஜி-க்கள், டி.ஐ.ஜி-க்கள், எஸ்.பி-க்கள் என 20 க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதனை அடுத்து தேனி மின் மயானத்தில் விஜயகுமாரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற பின் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்த நிலையில் டிஐஜி விஜய்குமார் துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் டிஐஜி விஜயகுமார் நீண்ட நாட்களாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டிஐஜியின் பாதுகாவலர் ரவிச்சந்திரனின் வாக்குமூலமும் அந்த முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. அதில் டிஐஜி விஜயகுமார் தன்னிடம் துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது கேட்டுவிட்டு அறைக்கு சென்றதாகவும், அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பாதுகாவலரும் , டிஐஜியின் ஓட்டுநரும் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் தன்னைத் தானே துப்பாக்கி சுட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் , மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்ததாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் போலீசார் பாதுகாவலர் ரவிச்சந்திரனிடம் துப்பாக்கியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.







