கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பு விபத்தில், 28 வயது மதிக்கத்தக்க ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேர்கொண்ட விசாரணையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், தொடர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடி பொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு , அவை பறிமுதல் செய்யப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 25 வயது மதிக்கத்தக்க கோவையைச் சேர்ந்த முகமது தல்கா , முகமது தவ்பிக், உமர் பாரூக் , பெரோஸ் கான்ஷேக் இதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரை வரும் 17ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த ஜனவரி 7-ஆம் தேதி பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி முகமது தல்கா,முகமது தவ்பிக், உமர் பாரூக் மற்றும் பெரோஸ் கான்ஷேக் இதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
பொங்கல் விடுமுறை என்பதால் 6 நாட்கள் விசாரணை முடித்து 6 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டு நாளை மீண்டும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.