வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி – மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு பயணியின் உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி, சேவை வழங்குநரை எச்சரித்து அவருக்கு கடுமையான அபராதம் விதித்துள்ளது.…

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு பயணியின் உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி, சேவை வழங்குநரை எச்சரித்து அவருக்கு கடுமையான அபராதம் விதித்துள்ளது.

சமீபத்தில் போபாலில் இருந்து குவாலியருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணி ஒருவர், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கும் உணவை சாப்பிடுவதற்காக வாங்கியுள்ளார். அப்போது அவர் வாங்கிய சப்பாத்தியில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த அந்த பயணி, கரப்பான் பூச்சியுடன் சப்பாத்தி சாப்பிடும் படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து தனது கவலையை தெரிவித்தார். அந்த பதிவில், தனக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள நிகழ்வு, ரயில் பயணிகளிடம் இந்திய ரயில்களில் உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தவிர அதே ரயிலில் பயணம் செய்த பலர், சுகாதாரமற்ற உணவை உட்கொண்டதாகவும், அதனால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் பதிவில் கருத்து தெரிவித்தனர். இந்த ட்வீட் மூன்று நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து, 4,000 பார்வைகளைக் குவித்துள்ளது. இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் சுகாதாரமற்ற உணவை வழங்கிய விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று பொறுப்பற்று செயல்படுபவர்களின் விற்பனை உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

https://twitter.com/subodhpahalajan/status/1683298445006880770?s=20

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இதற்கு பதிலளித்த ஐஆர்சிடிசி, உங்களின் விரும்பத்தகாத இந்த நிகழ்விற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டோம். உணவு தயாரிக்கும் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை வழங்குநருக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் மூல சமையலறையில் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

https://twitter.com/IRCTCofficial/status/1683348725257891845?s=20

இதுகுறித்து போபால் கோட்ட ரயில்வே மேலாளர் ட்விட்டரில் ட்வீட் செய்து, பயணிகளின் உணவு மாற்றப்பட்டு அவருக்கு புதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரயில்வே தரப்பில் கேள்வி கேட்கப்பட்ட போது, ​​தவறுதலுக்கு காரணமான உரிமதாரரை எச்சரித்து, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டதாக மேற்கு மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் வழங்கப்படும் உணவு குறித்து கேள்விகள் எழுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற பல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதே ரயிலில் பயணிக்கும் பல பயணிகளும் உணவின் தரம் குறித்து ட்விட்டரில் புகார் அளித்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.