ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்- அண்ணாமலை ட்வீட்

ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட…

ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது.

ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். இந்நிலையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

https://twitter.com/annamalai_k/status/1598216696971808768?t=Rho5Sb5rmVRJOZsSLPe3dw&s=08

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். அதில், “இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.