முக்கியச் செய்திகள் விளையாட்டு

பெங்களூரை வீழ்த்தியது தோனி படை: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் சிஎஸ்கே

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராத் கோலியும் தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தனர். இருவரும் ஆடியதை பார்த்து ஸ்கோர் 200- ஐ தாண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 53 ரன்கள் அடித்த நிலையில், பிராவோ பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்ததும் மொத்தமாக அடங்கிவிட்டது, அந்த அணி.

அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 12 ரன்னுடனும் படிக்கல் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகப்படியாக படிக்கல் 70 ரன்னும், கோலி 53 ரன்னும் அடித்திருந்தனர்.

சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும் தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களில் கேட்ச் ஆனார். டுபிளிசிஸ் 31 ரன்களிலும், மொயீன் அலி 23 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். சுரேஷ் ரெய்னா 17 ரன்களுடனும், கேப்டன் தோனி 11 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதுவரை 9 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 வெற்றி 2 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தில் டெல்லி அணியும், 3-வது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன.

Advertisement:
SHARE

Related posts

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

Halley karthi

ஞானதேசிகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

Jeba Arul Robinson

கீழடியில் மேலும் ஒரு உறைகிணறு!

Halley karthi