நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை விசாரித்த போது, பேருந்து நடத்துநர் போலீசார் முன்பு தரையில் படுத்து உருண்டு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரிலிருந்து நேற்று மதியம் மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து
புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்ததும் 1 to1 எனக் கூறி நாகர்கோவில் செல்லும் பயணிகளை மட்டுமே நடத்துநர் அந்த பேருந்தில் ஏற்றி உள்ளார்.
அப்போது நாங்குநேரி பயணிகள் சிலர் பேருந்தில் ஏறினர். பேருந்து நாங்குநேரி செல்லாது என்று நடத்துநர் கூறியதாகத் தெரிகிறது. அதற்குப் பயணிகள் இது வழக்கமாக நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்லும் பேருந்து தான் எனக்கூறி இறங்க மறுத்துள்ளனர். இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் நாங்குநேரி பயணிகளுக்கும் நடத்துநர் டிக்கெட் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இது 1 to 1பஸ் தானே? எப்படி இடையில் உள்ள ஊர் பணிகளை ஏற்றலாம் என நடத்துநருக்கு ஆதரவாக நாகர்கோவிலைச் சேர்ந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பயணிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனிடையே நாங்குநேரி பேருந்து நிலையத்தில் நாங்குநேரி பொதுமக்கள் பேருந்தைச் சிறை பிடித்தனர்.
இதுகுறித்து நாங்குநேரி காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்துநர் மற்றும், பயணிகளிடம் விசாரணை நடத்தினார். அதனை பொதுமக்கள் சிலர் செல்போனில் படம் எடுத்தனர். அதை பார்த்த நடத்துநர் திடீர் என தரையில் படுத்து உருண்டு கதறி அழுதுள்ளார். மேலும் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கூச்சலிட்டுள்ளார்.
மேலும் உயர் அதிகாரிகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க சொல்லி வாய்மொழியாக உத்தரவிடுவதாகவும் தரையில் உருண்டு அழுதபடி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த கூடுதல் கட்டணத்திற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதில் சிக்கி தினமும் நிம்மதியின்றி பணி செய்வதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தனக்கு மாரடைப்பு நோய் இருப்பதால் என்னால் நிற்க முடியவில்லை என்றும் அவர் கதறி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த பயணிகள் அவருக்குத் தண்ணீர் கொடுத்து உதவினர். இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்தனர். அதன் பின் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.







