பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையும் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளருமான சிவன், இன்று காலமானார். அவருக்கு வயது 89.
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தமிழில் ‘தளபதி’, ‘ரோஜா’, ‘இருவர்’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தந்தை சிவன். மலையாள சினிமாவின் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இவர் ‘யாகம்’, ‘கொச்சு கொச்சு உள்பட சில பல படங்களை இயக்கியுள்ளார்.
புகைப்படக் கலைஞராக சினிமாவில் அறிமுகமான சிவன், மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் இன்று காலமானார்.
பிரபல ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், சங்கீத் சிவன், சஞ்சீவ் சிவன் ஆகியோருடன் இணைந்து சிவனுக்கு ஆறு குழந்தைகள். ஒளிப்பதிவாளர் சிவனின் மறைவை அடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







