தணிக்கை அதிகாரம் அரசிடம் சென்றால் சினிமாவை காப்பாற்ற முடியாது: ஆர்.கே.செல்வமணி

தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்றுவிட்டால், திரைப்படத் துறையை யாராலும் காப்பாற்ற முடியாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிளார்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:…

தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்றுவிட்டால், திரைப்படத் துறையை யாராலும் காப்பாற்ற முடியாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிளார்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

காலம் மாறும்போது சட்டங்களும் மாறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சட்ட திருத்தம் அவசியம், ஆனால் எந்த மாதிரியான திருத்தமாக இருக்க வேண்டும் என்பதை சம்மந்தப்பட்ட துறையினருடன் கலந்தாலோசித்து அரசு செயல்படுத்த வேண்டும். அனைத்து அமைப்புகளிலும் தீர்ப்பாயம் உண்டு. படம் எடுப்பவர்கள் எல்லாம் பாரதப் போரை நிகழ்த்த முடியாது. தீர்ப்பாயம் இருந்தால் தான் வசதியாக இருக்கும்.

தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்றுவிட்டால், திரைப்படத் துறையை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒட்டுமொத்தமாக அதிகாரத்தை குவிப்பது சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும். விமர்சனமே கூடாது என்றால், படைப்பாளிக்கு அது தற்காலிக அழிவு. ஆனால் அரசுக்கு அது காலத்துக்கும் அழிவாக அமையும்.

ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது நாட்டுக்கும் நல்லதல்ல, அரசுக்கும் நல்லதல்ல. இது திரைப்படத் துறைக்கும், அரசுக்கும் இடையே உள்ள விஷயம். இதை பாஜகவுக்கு எதிரானது என்பதைப் போல் திசைதிருப்ப வேண்டாம். மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு பெப்சி சார்பாக வாழ்த்துக்கள்.

ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில், திரைப்படத் துறையினரை பாதிக்காத வகையில் திருத்தம் கொண்டு வர அவர் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என் மீது பரப்பப்படும் பண மோசடி புகார்கள் உண்மைக்கு புறம்பானது. நலிந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு பேட்டரி பைக் வாங்கித் தருவதற்காகவே பணம் வசூலிக்கப் பட்டது. அதில் எந்தவித கையாடலும் நடைபெறவில்லை. இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.