நூற்றாண்டை கடந்த தமிழ் சினிமாவில், ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியை, அந்த படம் பெறும் வசூலின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும், வசூலை வைத்தே வெற்றி முடிவு செய்யப்படும். பல கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள், சில கோடிகளை மட்டுமே வசூலாக பெறுவதுண்டு.
அதே நேரத்தில் சில லட்சங்கள் மட்டுமே செலவு செய்து எடுக்கப்படும் படங்கள், பல கோடி ரூபாய் வசூல் சாதனைகளை படைத்துள்ளன. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் ரஜினிகாந்த் நடிப்பில், 2014-ல் வெளியான “லிங்கா” திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்த பணத்தை திருப்பித்தர வேண்டும், என ரஜினியிடம் கோரிக்கை வைத்தனர். இதுபோல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் இருந்துள்ளன. ஆனால், “வலிமை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகாத நிலையில், இத்திரைப்படம் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்குமார் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை படம் தொடர்பான ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. இதனால் விரத்தியடைந்த அஜித் ரசிகர்கள், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு, அரசியல் நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்கள், கோயில் பூசாரி என பல்வேறு தரப்பினரையும் நச்சரித்து வருகின்றனர்.
அஜித் நடிக்கும் படங்கள் எப்போதும் அதிக தொகைக்கு விற்பனையாகும். அதே நேரத்தில் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பு வலிமை படத்தின் வணிக ரீதியான மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். அந்தவகையில், இதுவரை எந்த திரைப்படமும் பெறாத வியாபாரத்தை, ஏன் அஜித்தின் மற்ற படங்கள் கூட பெறாத வியாபாரத்தை, வலிமை திரைப்படம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. “வலிமை” என்ற தலைப்பை மட்டுமே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், இதை ஒருவிதமான மார்க்கெட்டிங் யுக்தியாக பயன்படுத்துவதாக, சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் நீங்க எந்த யுக்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளுங்கள், எங்களுக்கு படத்தின் அப்டேட் மட்டும் கொடுத்தால் போதும் என்பதே, அஜித் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.







