முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

சோழ இளவரசர்களின் வழித்தடங்கள்- நிழலும்…நிஜமும்… (பாகம் 2)


எஸ்.இலட்சுமணன்

வருடக்கணக்காக திரையரங்கிற்கு வராதவர்களைகூட குடும்பம் குடும்பமாக வரவழைத்து தலைமுறைகளை கடந்தும் தமிழகத்தின் பேசு பொருளாக திகழ்கிறது பொன்னியின் செல்வன்.   அமரர் கல்கி எழுதிய நாவலை படித்துவிட்டு பொன்னியின் செல்வன்  முதல் பாகம் படம் பார்க்க வருபவர்கள் ஒருபுறம், அந்த படத்தை பார்த்துவிட்டு நாவலை படிப்பவர்கள் ஒருபுறம் என பொன்னியின் செல்வன் நாவலுக்கான வாசகர் வட்டம் மேலும் மேலும் விரிவடைந்து வருகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் சோழர் காலத்து வரலாற்று கதாபாத்திரங்கள் நிஜத்திலும் உலாவிய இடங்களாக கருதப்படும் சரித்திரப்புகழ் பெற்ற நிகழ்விடங்கள் குறித்து நியூஸ்7 தமிழில் பார்த்து வருகிறோம். சோழ இளவரசர்களான ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் பயணித்ததாக பொன்னியின் செல்வனில் காட்டப்பட்டிருக்கும் இடங்கள் பற்றியும்,  அவ்விடங்களின் வரலாற்று பின்னணி குறித்தும் பார்ப்போம். 

தியாகராஜர் கோயில்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் நாவலில் அசையும் கதாபாத்திரங்களோடு அசையா கதாபாத்திரங்களும் ஆங்காங்கே வந்து கதையை நகர்த்திவிட்டுச் செல்லும். அப்படி அந்த வரலாற்று புனைவு நாவலில் கல்கியால் வர்ணிக்கப்பட்ட இடங்களில் திருவாரூரும் ஒன்று. திருவாரூரில் உள்ள தியாகராஜசுவாமி திருக்கோயில், இளவரசர் அருள்மொழிவர்மன் தரிசித்த இடங்களில் ஒன்று.

பொன்னியின் செல்வனின் நாவலின் சிகர நிகழ்வாக உத்தம சோழருக்கு மணிமகுடத்தை அருள்மொழிவர்மன் தியாகம் செய்யும் இடத்தையே கருதுகிறார் அமரர் கல்கி. இதனாலேயே இந்த நிகழ்வு நடைபெறும் கடைசி பாகத்திற்கு தியாகச் சிகரம் என பெயரிட்டுள்ளார். இந்த 5ம் பாகத்தில்தான் தியாகராஜர் சுவாமி கோயிலுக்கு பொன்னியின் செல்வர் செல்வதாக காட்டப்பட்டிருக்கும். அந்த கோயிலுக்கு செல்லும்போது தியாக உணர்வு அவருக்கு மேலோங்கும். மணிமகுடத்தை உத்தமசோழருக்கு வழங்க வேண்டும் என்று இந்த தலத்தில்தான் தீர்க்கமாக முடிவெடுப்பார். சிவபெருமான் தியாகத்தின் திருவுருவம் என்று எடுத்துக்கூறி அதற்காக புராணங்களில் கூறப்பட்ட உதாரணங்களையும் அவர் எடுத்துரைப்பார்.

தேவாரம் திருவாசங்களில் பாடல்பெற்ற இந்த திருத்தலம் தமிழ்நாட்டின் மிகப் பழமையான சிவன் கோயில்களில் ஒன்று. பஞ்சபூத தலங்களில் பூமிக்கான தலமாக விளங்கும் தியாகராஜர் கோயில் இறைவனை திருப்பாற்கடலில் திருமால் தனது இதயத்தில் வைத்து பூஜித்தாக ஐதீகம். திருவாரூர் அழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. இந்த ஆழித்தேர் உலகிலேயே மிகப்பெரியது என்கிற பெருமையை பெற்றுள்ளது. பசுவுக்கு நீதி வழங்குவதற்காக சோழ மன்னன் மனு, தனது மகனையே தேரை ஏற்றிக்கொல்ல முற்பட்ட நிகழ்வும் இந்த திருவாரூரில்தான் அரங்கேறியது.

காஞ்சிபுரம் பொற்கோயில்

சோழசாம்ராஜ்யத்தின் பட்டத்து இளவரசனான ஆதித்ய கரிகாலன் என்றதுமே அவர் காஞ்சிபுரத்தில் கட்டிய பொன்மாளிகையும் நினைவுக்கு வரும். ஆதித்ய கரிகாலன் காட்டிய வீண் ஆடம்பரம்தான் இந்த பொன் மாளிகை என்கிற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், தந்தை மீது மகன் வைத்துள்ள பாசத்தின் அடையாளமாக காஞ்சிபுரம் பொன் மாளிகை வர்ணிக்கப்படுகிறது.

இந்த மாளிகையில் வந்து தங்கும்படி பலமுறை ஆதித்ய கரிகாலன் ஓலை அனுப்பியும் அந்த விருப்பத்தை நிராகரித்தே வந்தார் சுந்தரசோழன். ”நம்முடைய குலத்தில் தோன்றிய யாரும் தாங்கள் வசிக்கும் அரண்மனையை பொன்னால் கட்டியதில்லை. அரண்மனையை கட்டுவதை காட்டிலும் ஆலயம் கட்டுவதையே முதன்மையாக கருதினார்கள். ஆனால் ஆதித்ய கரிகாலன் இப்படி செய்கிறானே” என சுந்தர சோழர் தமது மனைவியிடம் வேதனைப்படுவதாக பொன்னியின் செல்வனின் நாவலில் கூறியிருப்பார் கல்கி. அவ்வாறு மகனின் அழைப்பை நிராகரித்து வந்த சுந்தரசோழர் ஆதித்யகரிகாலன் கொல்லப்பட்ட பின்னர் அவரது விருப்பத்தை நிறைவேற்ற தன் கடைசி காலத்தை காஞ்சிபுரம் பொன்மாளிகையிலேயே கழித்ததாக சோழர்களின் வரலாறு தெரிவிக்கிறது. இந்த பொன்மாளிகையின் தொல்லியில் சுவடுகள், காஞ்சிபுரத்தில் தற்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இந்த பொன்மாளிகை காஞ்சிபுரத்தில் இருந்ததா, அல்லது தஞ்சையில் இருந்ததா என்கிற விவாதம் வரலாற்று ஆய்வாளர்களிடையே எழுவதுண்டு. ஆனால் அப்படி ஒரு பொன்மாளிகை சோழர் காலத்தில் இருந்ததை செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.

தஞ்சை பெரியகோயிலில் உள்ள கல்வெட்டில் சுந்தர சோழரை ”பொன் மாளிகை துஞ்சிய தேவர்” எனக் கூறப்பட்டுள்ளது. அந்த கோயிலில் சோழர்கள் காலத்து சிறப்புகளை விளக்கும் தொல்லியல் சான்றுகளாக பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

காஞ்சிபுரம் அருகே திருமால்பூரில் உள்ள மணிக்கண்டீஸ்வர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலும் ஆதித்யகரிகாலனால் பொன்மாளிகை கட்டப்பட்டதும், அந்தமாளிகையில் அவரது தந்தை சுந்தரசோழர் தங்கியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கண்டீஸ்வரர் கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்கான உதவிகளை காஞ்சிபுரத்தில் உள்ள பொன்மாளிகையிலிருந்து வழங்குகிறேன் என சுந்தரசோழ்ர் குறிப்பிடுவதாக கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

திருநாவலூர்

காஞ்சிபுரத்திலிருந்து கடம்பூர் மாளிகைக்கு மேற்கொண்ட பயணம்தான் ஆதித்யகரிகாலனின் வாழ்க்கையில் இறுதிப் பயணமாக அமைந்தது. நந்தினியின் அழைப்பை ஏற்று அவரை சந்திப்பதற்காக கடம்பூர் மாளிகைக்கு செல்லும் வழியில் ஆதித்ய கரிகாலன் செல்லும் இடங்களில் ஒன்றுதான் திருநாவலூர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள திருநாவலூர் சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த தலமாகும். இங்குள்ள தேவாரப் பாடல் பெற்ற பக்தஜனேஸ்வரர் ஆலயம் அருகேதான் ஆதித்யகரிகாலனை கொலை சூழ்ச்சியிலிருந்து மீட்க அவரை எச்சரிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடக்கும். ஆதித்யகரிகாலனின் தாத்தா மலையமான்,  நந்தினியின் அழைப்புக்கு பின்னால் நம்பிக்கைத் துரோகமும், சூழ்ச்சியும் இருக்கலாம் என எச்சரிப்பார். இதற்காக தக்கோலம் போரில் ராஜாதித்ய சோழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சியையும் உதாராணமாக கூறுவார். வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைவதுபோல் வந்த கங்க மன்னன் விஷ அம்புகளை எய்து ராஜாதித்ய சோழனை கொன்றதை சுட்டிக்காட்டி ஆதித்யகரிகாலனை மலையமான் எச்சரிப்பார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் கடம்பூர் மாளிகையை நோக்கி ஆதித்யகரிகாலன் தொடர்ந்து முன்னேறிச்செல்வார்.

தக்கோலம்

மலையமானால் ஆதித்யகரிகாலனுக்கு சுட்டிக்காட்டப்பட்ட தக்கோலம் போர் சோழர்கள் அரிதாக தோல்விகளை சந்தித்த யுத்தங்களில் ஒன்று. தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தக்கோலத்தில்தான் கி.பி.949ம் ஆண்டு சோழர்களுக்கும், இராஷ்டிரகூடர்களுக்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றது.

இந்த போரில் முதலாம் பராந்தக சோழனின் படைக்கு துணையாக சேர படைகளும் களம் இறங்கின. ராஷ்டிரகூட படைகளுக்கு துணையாக கங்கரின் படைகள் கைகோர்த்தன. மிகவும் உக்கிரமாக நடைபெற்ற இந்த போரில் சோழர்களின் படையை முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ராஜாதித்ய சோழன் வழிநடத்தினார். அவரை தமது சூழ்ச்சியால் நம்பிக்கை துரோகம் செய்து கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் கொன்றதாக குற்றச்சாட்டு வரலாற்றில் கூறப்படுவதுண்டு. தக்கோலம் போர் குறித்த தகவல்கள் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கன்னட கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தக்கோலத்தில் உள்ள ஜலந்தீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பிரிசித்திபெற்ற சிவ தலமாக விளங்குகிறது.

தக்கோலத்தில் உள்ள மற்றொரு பழைமைவாய்ந்த ஆலயமான வாலீஸ்வரர் கோயில் சோழர் காலத்து நினைவுகள் பலவற்றை தாங்கி நிற்கிறது. முதலாம் ராஜேந்திரன் சோழன், விக்கிரமசோழன் காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இந்த ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்

காஞ்சிபுரத்திலிருந்து கடம்பூர் மாளிகை செல்லும் வழியில் திருநாவலூர் கோயிலை அடுத்து மேலும் ஒரு ஆலயம் அருகே ஆதித்ய கரிகாலனுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயம்தான் அந்த தலம்.

அந்த ஆலயம் அருகேதான் நீண்ட இடைவெளிக்கு பின் ஆதித்ய கரிகாலனை வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சந்திப்பார்கள். கடம்பூரில் சம்புவராயர் மாளிகைக்கு செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், நந்தினி விரித்திருக்கும் சதிவலை குறித்தும் பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலனிடம் எடுத்துரைப்பார் வந்தியத்தேவன். எனினும் நந்தினியை எப்படியாவது சந்தித்து வீரபாண்டியனை கொன்றதற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த ஆதித்ய கரிகாலன், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடம்பூர் மாளிகையை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்வார்.

சோழ இளவரசர்களான ஆதித்யகரிகாலன், அருள்மொழிவர்மன் பயணித்த வழித்தடங்களை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் குறித்து அடுத்தக்கட்டுரையிலும் காண்போம்.

-எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக-வின் ஒரே நம்பிக்கை எடப்பாடி பழனிசாமி – நியூஸ் 7 தமிழுக்கு ஆர்.பி.உதயகுமார் பேட்டி

EZHILARASAN D

பொதுக்குழு – ஒரே மேடையில் ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு இடம்

Halley Karthik

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சாதி தீண்டாமை?

Arivazhagan Chinnasamy