மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் முதல், முதல் தர கிரிக்கெட் வரையிலான பயணத்தை கடுமையான தருணங்களிலும், பயமறியா தன்மையுடன், தனக்காக அன்றி தன் அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாடிய ஒரு வீரரை நம்மால் பார்க்க முடியுமா?…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்படி பார்க்க முடியுமென்றால் அது சின்ன தல சுரேஷ் ரெய்னாவாகத்தான் இருக்கும். ஆம் சின்ன தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா என்பது கிரிக்கெட் வட்டாரமே அறிந்த ஒன்று. சுரேஷ் ரெய்னாவை பொறுத்தவரை, ஒரு காலகட்டத்தில் அதிரடி நாயகனாக அவதாரம் தரித்த முதல், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடித்து, அணிக்கு பக்கபலமாக விளங்கிய வீரர் எனும் வகையில் கை விட்டு எண்ணினால் கூட, சுரேஷ் ரெய்னா பெயர்தான் முதலில் தோன்றும்.
அந்த வகையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற முறையிலும், சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையிலும் இந்திய அணிக்கும் சரி, தான் தாய் அணியான உத்திர பிரதேச அணிக்கும் சரி தனது பர்ஸ்ட் கிளாஸ் கேரியரில் ஆட்ட நாயகனாகவே விளங்கி இருக்கிறார் ரெய்னா. 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நாள் முதல் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டிவரை எதிர்ப்பை சந்திக்காத மற்றும் எதிர்பார்ப்பை தகர்க்காத ஓர் மந்திர புன்னகையுடன் கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தவர் சுரேஷ் ரெய்னா.
தனது முதல் நிலை போட்டிகளை பொறுத்தவரை, டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் ஒருநாள் போட்டிகளிலேயே அதிக பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ரன்கள் அடித்து, 36 அரைசதம் மற்றும் 5 சதங்களை அடித்திருக்கிறார் ரெய்னா. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த சுரேஷ் ரெய்னா, அதன் பின் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். குறுகிய காலத்தில் ஓய்விற்கான காரணம் என்ன என பலர் விமர்சித்து வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் பணியை தொடர்ந்தார்.
2002 ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலத்தின் U16 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரெய்னா U19 அணிக்காக விளையாடிய போது இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட போது, டெஸ்ட் போட்டியில் இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தலான தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்.
2003 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தனது கால் தடத்தை பதித்த சுரேஷ் ரெய்னா உத்திர பிரதேச அணிக்கு, கேப்டனாகவும் விளையாடி உள்ளார். 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 38 பந்துகளில் 90 ரன்கள் அடித்த அனுபவத்தை, முதல் தர கிரிக்கெட்டில் செயல்படுத்த விரும்பிய ரெய்னா 35.1 ஆவ்ரேஜ் உடன், 93.5 ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி, எல்லா நிலையிலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் கூட மிஸ்டர் ஐபிஎல் பட்டத்திற்கு சொந்தமான ரெய்னா, 205 போட்டிகளில் 5528 ரன்களை, 32.5 சராசரியில் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ஆடி, நம்பிக்கைக்கு உரிய வீரராக வளம் வந்தார். அடுக்கடுக்கான சாதனைகளை புரியாவிட்டாலும், 6000 டி20 ரன்கள் மற்றும் 8000 டி20 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமை, ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள் கடந்த முதல் வீரர் எனும் பெருமை, ஐபிஎல் போட்டிகளில் 100 சிகார்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமை, ஐபிஎல் பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் பெருமை என அடுக்கடுக்காக வைத்துள்ளார் ரெய்னா.
இந்தியா சுற்றுப்பயணம் வந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரெய்னா விளாசிய சதம், மறக்க முடியாத ஒரு போட்டியாக இன்றும் திகழ்கிறது. 2014 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இரண்டாவது போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி 105 ரன்கள் அவுட் ஆகி இருந்தாலும் எதிர் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தல் சாதனை புரிந்தது.
அதன் பின்னரே சுரேஷ் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். சுரேஷ் ரெய்னாவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனியும் சிறந்த நண்பர்கள் என்பதற்கு சான்றாக விளங்கிய நிகழ்வு தான் சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களிலேயே, சுரேஷ் ரெய்னாவும் “நானும் உங்களுடன் என்னை இணைத்து கொள்கிறேன்” என கூறி விடைபெற்றார். கடந்த சில வருடங்களாக மோசமான சூழலில் தனது பேட்டிங் இருந்து வந்த நிலையில், பல்வேறு கட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் சுரேஷ் ரெய்னா, தனது உறவு அணியான சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் அவரை வாங்காத நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரெய்னாவுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு வகையில் மன ரீதியான ஒத்துழைப்பை வழங்கி வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தான் தீவிர வளைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், நம்பிக்கையுடன் செயல்பட உள்ளதாகவும் அவரை பற்றிய செய்தி வெளி வந்த நிலையில், செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அதிகாரபூர்வ ஓய்வை அறிவித்தார். தனது ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல என அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா இடது கை பேட்ஸ்மேன்களின் ஸ்டைலிஷ் ஷாட்டுகளுக்கு உதாரணமாக விளங்கி இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
-நந்தா நாகராஜன்