இலங்கை வந்துள்ள சீன கப்பல் ராணுவ கப்பல் அல்ல என்றும் ஆராய்ச்சி கப்பல்தான் என்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் ஹம்பன்தோட்டா சர்வதேச துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இந்த கப்பல் உளவுத் தகவல்களை சேகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டது என கருதப்படுவதால் அக்கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வர இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து யுவான் வாங் 5 கப்பலின் வருகையை காலவரையின்றி நிறுத்திவைக்குமாறு இலங்கை சீனாவுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்பட்டது.
இலங்கையின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது.
இந்நிலையில், சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அந்நாட்டு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்குள் வர இலங்கை அனுமதி வழங்கியதை அடுத்து அக்கப்பல் இலங்கை வந்துள்ளது.
ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இருந்தவாறு இந்தியாவின் செயற்கைக்கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளிட்டவை குறித்து யுவான் வாங் 5 கப்பல் ஆய்வுகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தி யோமியுரி ஷிம்புன் என்ற ஜப்பான் நாளிதழ்க்கு பேட்டி அளித்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் ஹம்பன்தோட்டா பகுதியை சீனா ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆய்வுக் கப்பலுக்குத்தான் என்றும் ராணுவ கப்பலுக்கு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அதனால்தான் அந்த கப்பலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.









