உளவு வலையில் ‘உய்கர்’ மக்கள்

இந்தியாவில் பெகாசஸ் உளவு செயலி விவகாரம், பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடான சீனாவில் லட்சக்கணக்கான இஸ்லாமிய “உய்கர்” சமூக மக்களை, செல்போன் செயலி மூலம் நீண்டகாலமாக கண்காணித்து வருகிறது அந்நாட்டு…

இந்தியாவில் பெகாசஸ் உளவு செயலி விவகாரம், பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடான சீனாவில் லட்சக்கணக்கான இஸ்லாமிய “உய்கர்” சமூக மக்களை, செல்போன் செயலி மூலம் நீண்டகாலமாக கண்காணித்து வருகிறது அந்நாட்டு அரசு. இதன் மூலம் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள், செல்போன் பேச்சுக்கள், பயணங்கள், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடனான தொடர்பு உள்ளிட்டவை தீவிரமாக உளவு பார்க்கப்படுகிறது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களை நிறுவி, மக்களை கண்காணிக்கும் நாடு சீனா தான். அதாவது சாலை சிக்னல்கள், பேருந்து நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் என சுமார் 67 கோடி கேமராக்களை நிறுவியுள்ளது. அந்த வகையில், உய்கர் மக்கள் கணிசமாக வசிக்கும் சின்ஜியான்ங் மாகாணத்தை, அங்குலம் அங்குலமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வளவு ஏன்…?, “உய்கர்” மக்கள் வீட்டில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்களா என்று கூட, சீன அரசு உன்னிப்பாக கண்காணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சின்ஜியான்ங் மாகாணத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய உய்கர் மக்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், சுமார் 10 லட்சம் உய்கர் சமூக மக்கள், இவ்வாறு சீன அரசின் பிடியில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, அடித்தட்டு நிலையில் உள்ள இஸ்லாமிய மக்களின் பொருளாதார உயர்வுக்காக, அவர்கள் மறுகல்வி மையங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக விளக்கம் கூறியது. அது என்ன மறு கல்வி மையங்கள்?….

மக்களின் மதரீதியான நம்பிக்கைகளை சிதைத்து, சிந்தனையிலும் சீனமயமாக்கலை புகுத்துவதே மறுகல்வி மையங்களின் நோக்கம்…. தேசியவாதம் என்ற பெயரில், இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு கட்டாயப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதாவது சீன அரசியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான போதனை வகுப்புகள், இந்த முகாம்களில் நடத்தப்படுகின்றன. மேலும், இந்த முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இஸ்லாமிய பெண்கள், திட்டமிட்ட முறையில் தினமும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட பலர் அம்பலப்படுத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல், முகாம்களில் சிறைவைக்கப்படும் இளைஞர்களின் கைகள் பின்புறமாக விலங்கிடப்பட்டு, பல மணி நேரம் தரையில் அமர வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்படுவதாகவும், இவ்வாறு அவர்கள் துன்புறுத்தப்படுவதை, பிறரை காணச் செய்து, மறைமுகமாக அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உய்கர் மக்கள் போராட்டம்

“உய்கர்” மக்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகள் அனைத்தும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், சீனாவில் மொத்தம் 380 மறுகல்வி முகாம்கள் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாம்களில், சுமார் 20 லட்சம் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகள் அல்லது பல மாதங்களுக்கு பிறகு, இந்த முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அதன்பின் இரவில் தூக்கம் வராத அளவுக்கு, உய்கர் மக்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.

உலகெங்கும் சுமார் 2 கோடி இஸ்லாமிய உய்கர் சமூகத்தினர் உள்ள நிலையில், சீனாவில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் சின்ஜியான்ங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அவர்களின் மதநம்பிக்கைகளை சிதைக்கும் முயற்சியாக, சின்ஜியான்ங் மாகாணத்தை பன்றி வளர்ப்புத் தொழில் கேந்திரமாக மாற்ற, சீன அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பாலைவனம் நிறைந்த சின்ஜியான்ங் மாகாணத்தில், பருத்தி விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. இதை பயன்படுத்தி சுமார் 5 லட்சம் உய்கர் சமூகத்தினர் பருத்தி பறிக்கும் பணியில், கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. அவர்களை குறிவைத்தே இப்பகுதியில் அதிகளவில் பருத்தி தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சின்ஜியான்ங் மாகாணத்தில் உள்ள டாரிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் லோ ஜோயு, கடந்த 2015-ல் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசுகையில், “உய்கர்” மக்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்று பகிரங்கமாக பேசியுள்ளார். அதன் பின்பே உய்கர் பூர்வகுடிகளின் பிறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கைகள், முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தவகையில், 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், இஸ்லாமிய உய்கர் சமூகத்தில், குழந்தை பிறப்பு விகிதம் 48.7 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிட இன்னொரு அதிர்ச்சி தகவல், உய்கர் மற்றும் பூர்வீக சிறுபான்மை இன மக்கள் தொகை விகிதம், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், 26 லட்சம் முதல் 45 லட்சம் வரை, சீன அரசு கட்டுப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

உய்கர் மக்கள் போராட்டம் (2)

உய்கர் மொழியை அழிக்கும் முயற்சிகளிலும், சீன அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், சின்ஜியான்ங் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பிரிவினைவாதிகள் என்று கூறி, கைது செய்து சிறையில் அடைக்கிறது சீன அரசு. இதில், ஏராளமானோருக்கு உடனடியாக மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சீனாவில் “உய்கர்” மக்கள் நரகத்தில் இருப்பது போன்ற வேதனைகளை அனுபவித்து வருவதாகவும், அரசின் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாவதாகவும், சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கருத்து தெரிவித்துள்ளது. இதுபோல், இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான நியூகேசில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஜோன் ஸ்மித் பின்லே கூறுகையில், “இஸ்லாமிய உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசு இனப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும், அச்சமூகத்தை வேரறுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவில் இஸ்லாமியர்கள் இவ்வாறு கடும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளுக்கும் அதே அளவில் நெருக்கடிகள் தரப்படுவதாக கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்களை போப்பாண்டவர் நேரடியாக நியமிப்பது வழக்கம். ஆனால், சீனாவை பொறுத்தவரை அந்த பணியையும் சீன அரசே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு, இன்றுவரை அவ்வாறே செயல்படுத்தி வருகிறது. எனவே, சீனாவை சேர்ந்த கார்டினல்களுக்கு பிற நாடுகளில் உள்ளவர்களை போல சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

எனினும், இத்தகைய குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இஸ்லாமிய “உய்கர்” சமூகத்தினர் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீது, எத்தகைய அடக்கு முறைகளும் கையாளப்படவில்லை என்றும், கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகள் எதையும் சீன அரசு மேற்கொள்ளவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையர், தாராளமாக நேரில் வந்து ஆய்வு செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ள வாங் யி, அதற்கான காலம் மற்றும் அனுமதி குறித்த பிற தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.

சீனாவில் “உய்கர்” மக்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. சீன அரசிடமிருந்து “உய்கர்” மக்கள் எதிர்பார்ப்பது எந்த சலுகைகளையும் அல்ல… சக குடிமக்களை போன்று, சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் உரிமையை மட்டுமே…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.