ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே மோதல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் சுமார் 21 மணி நேரம் நிகழ்ந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்பட வில்லை. இதனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில் நேற்று, ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அடுத்த சில வாரங்களுக்குள் சீனா வழங்க உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டது. தொடர்ந்த அதே நாளில் ஈரானுக்கு இராணுவ உதவி வழங்கினால், சீனாவிற்கு 50 சதவீதம் புதிய வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஈரானுக்கு ஆயுதம் வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது ;
இராணுவப் பொருட்களின் ஏற்றுமதி விஷயத்தில் சீனா எப்போதும் எச்சரிக்கையான மற்றும் பொறுப்பான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. தனது சொந்த ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க கடுமையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி வருகிறது. ஆதாரமற்ற அவதூறுகளையோ அல்லது தீய நோக்கத்துடன் தொடர்புபடுத்துவதையோ நாங்கள் எதிர்க்கிறோம்.







