ஜப்பான் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை.!

ஜப்பான் ஃபுக்குஷிமா அணு மின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு நீரை கடலில் கலக்க அந்த நாட்டு அதிகாரிகள் ஒப்புதல் பெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டுப் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் உணவுப் பொருள்களை இறக்குமதி…

ஜப்பான் ஃபுக்குஷிமா அணு மின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு நீரை கடலில் கலக்க அந்த நாட்டு அதிகாரிகள் ஒப்புதல் பெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டுப் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது.

அதேசமயம், அணு மின் நிலையத்தில் அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், சீன அரசு ஜப்பான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

ஜப்பானின் கிட்டத்தட்ட 10 மாநிலங்களிலிலிருந்து பெறப்படும் உணவுகள் இனி இறக்குமதி செய்யப்படாது என்று சீனா தெரிவித்திருக்கிறது. அணுசக்தியால் மாசுபட்ட உணவுப் பொருட்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க சீனா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பானிய உணவுப் பொருட்களும் குறிப்பாக கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சீனா தெரிவித்தது.

சீன அரசு எடுத்துள்ள இந்த முடிவிற்கு ஜப்பான் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “அணு உலையைக் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த அந்த நீர், தற்போது பாதுகாப்பான அளவுக்கு கதிர்வீச்சு நீக்கப்பட்டுள்ளதால் அந்த நீரை கடலில் கலப்பது ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையே, கடலில் ஃபுகுஷிமா அணு உலை நீரைக் கலக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.