சீன கப்பல் வருகைக்கு எதிர்ப்பு – இந்தியாவுக்கு சீனா கண்டனம்

சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, இலங்கை துறைமுகத்துக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது அறிவற்றது என சீனா விமர்சித்துள்ளது. சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, வரும்…

சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, இலங்கை துறைமுகத்துக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது அறிவற்றது என சீனா விமர்சித்துள்ளது.

சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, வரும் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு இலங்கை ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.

இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் வரலாம் என்று கூறப்பட்டது.

2007ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கிமீ தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவவும் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்தனர்.

எனவே, இந்த கப்பல் இலங்கைக்கு வருவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரக்கூடியது என இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக, அந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. இதனால், கப்பலின் வருகையை காலவரையின்றி தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், இந்த எதிர்ப்பு அறிவுப்பூர்வமானது அல்ல என்று விமர்சித்துள்ளார்.

மேலும், சீனா – இலங்கை இடையேயான இயல்பான பரிமாற்றத்தை எந்த ஒரு மூன்றாவது நாடும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சுதந்திரமான நாடு என்பதால் அதன் நலனுக்கான முடிவுகளை எடுக்கும் உரிமை அந்த நாட்டிற்கு உள்ளது என தெரிவித்துள்ள வாங் வென்பின், இந்திய பெருங்கடலின் மையமாக இலங்கை திகழ்வதால் பல நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் அங்கிருந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.