இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நேற்று உரை நிகழ்த்திய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம், பார்வையாளர்கள் தரப்பில் இருந்து சீனா – இந்தியா உறவு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதில் அளித்த எஸ். ஜெய்சங்கர், இந்தியா – சீனா உறவு மிக மோசமான கலகட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். கிழக்கு லடாக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனா மேற்கொண்ட நடவடிக்கைதான் இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
இந்திய – சீன உறவு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பது மிக முக்கிய கேள்விகளில் ஒன்று என தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்படாதவரை ஆசியாவுக்கான நூற்றாண்டு ஏற்படாது என தெரிவித்தார். பிற நாடுகளுக்காக அல்லாமல், சீனாவும் இந்தியாவும் தங்களின் நலன்களுக்காக இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என அவர் கூறினார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜெய்சங்கரின் பேச்சு தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் அளித்த அவர், சீனா, இந்தியா, பிற ஆசிய நாடுகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டினால் மட்டுமே ஆசியாவுக்கான நூற்றாண்டு ஏற்படும் என தெரிவித்தார். இந்தியாவும் சீனாவும் தொன்மையான நாகரீகங்களைக் கொண்டவை என தெரிவித்த அவர், இவை இரண்டும் வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட மிகப் பெரிய நாடுகள் என்றார்.
இந்தியாவும் சீனாவும் ஒன்றையொன்று கீழே இழுப்பதற்கு மாறாக, வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று உதவிகரமாக இருப்பதற்கான தொலைநோக்குப் பார்வையும் தகுதியும் கொண்டிருப்பதாகத் தெரிவித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இரு நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளைவிட பொதுவான நலன்கள் அதிகம் என்றார்.
எல்லை பிரச்னையைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் உள்ளதாகவும் வாங் வென்பின் தெரிவித்தார்.








