வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கோடிய கரைக்கு…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கோடிய கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்து அவர்களின் மீன்பிடி படககுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 22-8-2022 அன்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் 5வது நிகழ்வாகும். இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அவற்றின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.