அமலாக்கத்துறையில் இருந்து முதலில் டிடிவி தினகரன் தன்னை காத்து கொள்ளட்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் அரசு இருந்த போது கோவை மாநகராட்சியில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றபட்டதாக கூறினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு 150 கோடி ரூபாயில் 500 திட்டங்களை ரத்து செய்துவிட்டார்கள் என்றும் 130 பணிகள் 18 சதவீதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை என்றும் கூறினார்.
வெள்ளளூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடபட்டு 50 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் அதையும் ரத்து செய்துவிட்டார்கள். அரசின் பணத்தை வீண் அடிக்கிறார்கள். வெள்ளளூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம் கோவையில் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக கூறிய அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டதை முழுமையாக நிறைவேற்றவில்லை என சாடினார்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் நான்கு மாதத்திற்கு முன் நிறைவேறியிருக்க வேண்டும். அதை கிடப்பில் போட்டதால் பவானி சேகர் நீர் வீணாக கடலில் கலக்கிறது. எந்த திட்டத்தையும் திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. மேற்கு புறவழிச்சாலை திட்டம், மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம், விமான நிலைய பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் முடங்கி உள்ளது என்றார். திமுக அரசு எதற்கு எடுத்தாலும் குழு அமைக்கிறார்கள். 15 மாதங்களில் 38 குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. இந்த அரசாங்கம் குழு அரசாங்கம் என்ற அவர், போதைப்பொருளை கட்டுபடுத்த வேண்டும் என தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் மெத்தபோக்கின் காரணமாக போதைப்பொருட்கள் எளிதாக தமிழ்நாட்டில் கிடைக்கிறது.
போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இன்று காட்சி அளிக்கிறது. உலகத்தில் எங்காவது சூதாட்டத்தை தடை செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெறுமா? இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வழங்கபட்ட திட்டங்கள் அதிமுக அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டது என்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு, ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை என்றும் ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பிதான் உள்ளது என்றும் பதிலளித்தார்.
டிடிவி தினகரன் குற்றம் சாட்டப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலில் அமலாக்குத்துறையிலிருத்து டிடிவி தினகரன் தன்னை காத்து கொள்ளட்டும் என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
– இரா.நம்பிராஜன்








