முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொதுமக்களை சிறப்பாக சென்று சேர 6 பேர் கொண்ட குழு!

முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொதுமக்களிடம் மேலும் சிறப்பாக சென்று சேர 6  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும்…

முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொதுமக்களிடம் மேலும் சிறப்பாக சென்று சேர 6  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து பொது சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி – புதிய முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கு எம்.ஜி.ஆர் பல்கலைகழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

100 வருடங்கள் பழமை வாய்ந்த பொது சுகாதாரத்துறையில் 100 நாட்களில் 100 ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தனியார், அரசு சார்ந்த செவிலியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்துள்ளனர். தாய் சேய் நலன், உள்ளிட்ட பல தலைப்புகளில் கீழ் ஜிப்மர், ஐ ஐ டி போன்ற நிருவனங்களும் உதவியுடன் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 40 ஆராய்ச்சிகள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தொடர்ந்து கொரோனா போன்ற பாதிப்புகள் வர தான் செய்யும் அதனை எதிர்கொண்டு அதோடு தான் வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கு ஏற்ப மருத்துவத் துறை செயல்பட்டு வருகிறது. மிக விரைவில் 100 கட்டுரைகளை உள்ளடக்கிய தமிழ் தொகுப்பு வழிகாட்டி புத்தகமாக அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் வைக்கப்படும்.

எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மருத்துவர்கள் , செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த கள பணியாளர்கள் என யார் ஆராய்ச்சி செய்தாலும் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் பொருளாதார உதவி செய்யும். ரூ.50 கோடி செலவில் பல்கலைகழக நிதி ஆதாரத்தை கொண்டு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் கருணாநிதி பெயரில் நூற்றாண்டு கட்டடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் வர உள்ளது.

காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆட்சியில் ஒரு குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் அளவில் பயன் பெற்றனர். திமுக ஆட்சிக்கு பிறகு ரூ.5 லட்சம் ஆக உயர்ந்தது. யுனைட்ட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.1546 கோடி ஒவ்வொரு ஆண்டும் செலுத்தப்படும். இதன் மூலம் 853 அரசு மற்றும் 969 தனியார் மருத்துவமனையில் காப்பீட்டு திட்டம் உள்ளது.

நாட்டிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக விருது வழங்கப்பட்டது. 1 கோடியே 40 லட்சம் குடும்பங்கள் காப்பீட்டு திட்டம் மூலம் பயன்பெற்று வரும் நிலையில் இதனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சி காலத்தில் ரூ.699 என்ற அளவில் இருந்த பிரீமியம் தொகை இந்த ஆட்சியில் ரூ.849 என அதிகரித்துள்ளது.அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் கடந்த ஆட்சியில் 970 இப்போது 1779 என அதிகரித்துள்ளது.

முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பொதுமக்களிடம் மேலும் சிறப்பாக சென்று சேர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு பேராசிரியர் சுந்தர ராமன் தலைமையில் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மாநில திட்டக் குழு உறுப்பினர் மருத்துவர் அமலோற்பவநாதன்,  தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளாக ரேலா மருத்துவமனை மருத்துவர் முகமது ரேலா, காவிரி மருத்துவமனை மருத்துவர் அரவிந்தன் உள்ளிட்டோர் இந்த குழுவில் உறுப்பினராக உள்ளனர். 6 பேர் கொண்ட இந்த குழு முதலமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

பொது மக்கள் குறைகளை தீர்க்க பொது தொலைபேசி எண் உள்ளிட்டவை பின்னர் குழு கூடி அறிவிக்கும். இந்த குழு காப்பீட்டு திட்டத்தில் எழும் பிரச்னைகளை கலைந்து மக்களிடம் எளிதாக கொண்டு செல்வதற்கும், காப்பிடு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை சேர்ப்பதற்கும் அரசுக்கு அறிவுரை வழங்கும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.