வசூலில் தொடர் சாதனை படைத்து வரும் “ஜெயிலர்” திரைப்படம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் ரூ 550 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழில் மிக வேகமாக 500 கோடியை கடந்த படம் என்ற பட்டியலில் 2-வது இடத்தைப்…

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் ரூ 550 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழில் மிக வேகமாக 500 கோடியை கடந்த படம் என்ற பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார்,  ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்தது.

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழ்நாட்டில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இந்நிலையில், இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம் மொத்தம் 12 நாட்களில் ரூ.550 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாகவும், கர்நாடகாவில் 60 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அளவில் முதல் வாரத்தில் ரூ.450.80 கோடியும், இரண்டாம் வாரம் முதல் நாளில் ரூ.19.37 கோடியும், 2ம் நாளில் ரூ.17.22கோடியும், 3ம் நாளில் ரூ.26.86 கோடியும், 4ம் நாளில் ரூ.29.71 கோடியும், 5ம் நாளில் ரூ.12.54 கோடி என மொத்தம் –  556.50 கோடியை வசூலித்துள்ளது.

தமிழ் திரையுலகில் மிக வேகமாக அதாவது 8 நாட்களில் ரூ.500 கோடி வசூலை கடந்த ஒரே படமாக “எந்திரன் 2.0” இருந்து வந்தது. இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.500 கோடியை கடந்து, அந்த பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.