மத்திய அரசை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்கள் கையில் சொம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பொழியாததால் கடுமையான வறட்சி நிலவியது. இதனால் கர்நாடகா மாநிலத்தின் மொத்தம் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதியாக கர்நாடகா அரசு அறிவித்தது.மேலும், வறட்சியால் பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு ரூ.18 ஆயிரத்து 171 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
இதையும் படியுங்கள் : மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!
இந்நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு ரூ. 3 ஆயிரத்து 454 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக்குறைவாகும்.
இதையடுத்து, வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக கூறி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டசபை வளாகத்திற்கு வெளியே திரண்ட அனைவரும் கைகளில் குவளைகள் மற்றும் செம்புகளை ஏந்தியபடி, மத்திய அரசு ஒதுக்கியுள்ள வறட்சி நிவாரண நிதி போதுமானதல்ல என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








