முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டம்; அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

ரூ.129 கோடி நிதியைக் கொண்டு அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை, முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன் மாதிரியான சாலையாக அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி…

ரூ.129 கோடி நிதியைக் கொண்டு அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை, முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன் மாதிரியான சாலையாக அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பிரிவு சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பில் புதிதாகக் கல்வெட்டு பாலம் மற்றும் சாலை மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியினை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போதைய பட்ஜெட்டில் ரூ18,000 கோடி பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை நடப்பாண்டிலேயே செலவு செய்து சாலை அமைத்தால்தான் தரமாக இருக்கும். கிடப்பில் போடப்பட்டால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விடும். ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட ஒப்பந்த நாட்களில் பணியினை முடிக்க வேண்டும். மேலும் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 32 இடங்களில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதற்காக 129கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாலை விரிவாக்கத்தின் பொதுநிலம் கையகப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தக்காரர்கள் சாலைப் பணிகளைத் தரமாகவும் ஒப்பந்த காலம் முடிவதற்குள் பணிகள் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பது குறித்த பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத் துறை செயலாளர்களுக்கு செயற்பொறியாளர்களுடன் வரும் 21ம் தேதியில் ஆலோசனை நடத்தப்படும்” எனக் கூறினார். இதனையடுத்து ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.