கட்டுரைகள்

சுங்கச்சாவடி நெருக்கடிகள்…!


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

சென்னை அருகேயுள்ள பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவையில் தெரிவித்திருப்பதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் நெரிசல்மிக்க சுங்கச்சாவடிகளில், பரனூர் சுங்கச்சாவடி முதன்மையானதாகும். தினமும் இந்த சுங்கச்சாவடியை இரு மார்க்கங்களிலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிக்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சுங்கச்சாவடிகள் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகளும், நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும் இயங்கி வருகின்றன. கொரோனா காலத்திலும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவதும் உயர்த்தப்படுவதும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். சுங்கச்சாவடி கட்டணத்தை ஆண்டுக்கு 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் குடிநீர் வசதி, கழிப்பறை, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், இத்தகைய வசதிகள் பல சங்கச்சாவடிகளில் காணப்படுவதில்லை. சில இடங்களில் சாலைகளும் சரிவர சீரமைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சுங்கச்சாவடிகளே வேண்டாம், என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சில வணிகர் சங்கங்களோ, மளிகை, காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்துகின்றன.

தமிழ்நாட்டில் நான்கரை லட்சம் லாரிகள் உட்பட, நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. காத்திருப்பு, கட்டண உயர்வு, நெரிசல், கூடுதல் செலவு போன்ற பல்வேறு காரணங்களால், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சிக்கல்களை ஓரளவு குறைக்கும் வகையில், சுங்கச்சாவடி கட்டணத்தை முன்கூட்டியே ஆண்டு கட்டணமாக, மத்திய அரசுக்கு செலுத்திவிடுவதாகவும், அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. எனினும், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

2017 செப்டம்பர் 13-ம் தேதி, சுங்கச்சாவடி தொடர்பான வழக்கு ஒன்று, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் தான் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

கட்டணம் மற்றும் கால தாமதம் தொடர்பாக, சுங்கச்சாவடி ஊழியர்கள் – வாகன ஓட்டிகள் இடையிலான மோதல்கள், தற்போது அதிகரித்து வரும் சூழலே நிலவுகிறது. Fastag மின்னணு முறை கட்டண வசதி, தொழில்நுட்பக் கோளாறால் செயல்படாத நேரத்தில் இத்தகைய மோதல் போக்கு அதிகரிக்கின்றன. சுங்கச்சாவடிகளால் பொதுமக்களுக்கு மறைமுகமாக ஏற்படும் நன்மைகளை விட, நேரடியாக ஏற்படும் பாதிப்புகளே அதிகம், என்பதே பெரும்பாலான வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மாவீரன் மங்கள் பாண்டேவின் பிறந்த நாள் இன்று

Vandhana

ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!

Saravana Kumar

ஆட்டக்காரர்களின் வெற்றிடத்தை நிரப்பிவிடலாம்… ஆளுமைகளின் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது…