சென்னையில் மறைந்த பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரைச் சேர்ந்த மாணிக்கவிநாயகம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.மேலும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் நாட்டுபுறப்பாடல்களையும் பாடியுள்ளார். திருடா திருடி, திமிரு, பேரழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலமானார்.
இதையடுத்து அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில், பிரபல திரைப்படப் பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.
https://twitter.com/mkstalin/status/1475142416428535808
இந்த நிலையில் அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் சென்று அஞ்சலி செலுத்தினார். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், இசை மரபிலே வந்த மாணிக்க விநாயகம் மறைந்துற்றார் “விடைகொடு எங்கள் நாடே” என்று பாடியவர் விடைபெற்றார் நல்ல கலைஞன் – நல்ல மனிதன் என்று இரண்டும் கூடிய அபூர்வம் அவர் குடும்பத்திற்கு நாம் ஆறுதல் சொல்லலாம் எவர் சொல்வது இசைக்கு…? என கவிதை மூலம் மாணிக்க விநாயகத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.







