ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கிய 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடின.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவுடன் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய நிலையில், நேற்றுடன் அரை இறுதி சுற்று முடிவடைந்தது. இதில் இந்திய அணியும், மலேசிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், இன்று மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பானும், தென்கொரியாவும் மோதின. இதில் ஜப்பான், கொரியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. அதே போல தோல்வியடைந்த கொரியா 4 ஆவது இடம் பிடித்தது. இந்த தொடரில் ஐந்தாம் இடத்தை பாகிஸ்தானும், கடைசி ஆறாவது இடத்தை சீனாவும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.







