”முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடாக்கிறார் ” – அண்ணாமலை விமர்சனம்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அண்டை மாநிலங்களில் உள்ள திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடாக்குறார் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அன்னாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

”திமுகவின் இந்தி கூட்டணிக் கட்சிகள் ஆளும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், கடந்த வாரம், தமிழகப் பதிவெண் கொண்ட சுமார் 100 ஆம்னி பேருந்துகளைச் சிறைப்பிடித்து, சுமார் 2 கோடி அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆம்னி போக்குவரத்துத் துறை முடங்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அளவிலான அனுமதிச் சீட்டு பெற்றுள்ள வாகனங்கள், குறித்து காலம் வரை, எந்த மாநிலங்களுக்கும் செல்லலாம். இந்த நிலையில், திமுக அரசின் பேராசை காரணமாக, பிற மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கு, திமுக அரசு கூடுதல் சாலை வரி விதிக்கத் தொடங்கியது. இதன் காரணமாகப் பாதிப்புக்குள்ளான பிற மாநில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள், அந்தந்த மாநில அரசுகளை வலியுறுத்தி, தற்போது, பிற மாநிலங்களில் தமிழக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும், தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகளுக்கு என, ஒவ்வொரு பேருந்துக்கும் சுமார் ₹4,50,000 வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தமிழக ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள், கடந்த ஒரு வாரமாக, முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிற மாநில முதலமைச்சர்கள் எல்லாம், அந்தந்த மாநில மக்கள் நலனுக்காகச் செயல்படும்போது, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மட்டும், தனது கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, கேரள, கர்நாடக மாநில அரசுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக ஆம்னி பேருந்து போக்குவரத்து எதிர்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.