‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25′- ஐ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25′- ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2025 – 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 13) வெளியிட்டார். அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதனை தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு தயாரித்துள்ளது. அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்றும் தனி நபர் வருமானம் ரூ. 2.78 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம், தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும் கரோனாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சேவைத் துறைகள் மீண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.