சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முன்னணி தொழில் நிறுவன பிரநிதிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலாண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவன உயர் அலுவலர்களை தனித்தனியாக சந்தித்தார். தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து அழைப்பு விடுத்ததுடன், முதலீட்டாளர் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழிற்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து, சிங்கப்பூரின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் ஆகியோரையும் முதலமைச்சர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து உரையாடவுள்ளார்.
மேலும், சிங்கப்பூரில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம் (TANSIM) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTD (Singapore University of Technology & Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு SIPO (Singapore India Partnership Office) மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு SICCI (Singapore Indian Chamber of Commerce and Industries) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. பின்னர் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









