பத்ம விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், பொது சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த 5 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷன் விருது பெறத் தேர்வாகியிருக்கும் ராமசாமி பழனிசாமி, மயிலானந்தன் ஆகியோருக்கும், பத்ம ஸ்ரீ விருது பெறத் தேர்வாகியிருக்கும் எச்.வி. ஹண்டே, சிவசங்கரி, காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன், ராமசாமி, விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், புண்ணியமூர்த்தி நடேசன், ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம், வி. காமகோடி ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது துறைகளில் தாங்கள் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கத்தினை வழங்கிடும் என நம்புகிறேன். பத்ம பூஷன் பெறவுள்ள டென்னிஸ் வீரரும் எனது நண்பருமான விஜய் அமிர்தராஜ், திரைக்கலைஞர் மம்மூட்டி, பத்ம ஸ்ரீ விருது பெறவுள்ள நடிகர் மாதவனுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.