சென்னையில் காவலர்கள் குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். காவலர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய அவர், அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம் என கூறியுள்ளார்.
பொங்கலன்று தன்னை சந்திப்பவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 10 ரூபாய் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதைப் பின்பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கத்தில் 10 ரூபாயும், அடுத்ததாக 20 ரூபாயும் வழங்கி வந்தார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் தன்னை சந்தித்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தாண்டு 100 ரூபாய் வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.







