தமிழ்நாடு முழுவதும் நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார்.
விவசாயத்திற்கும், கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு உற்ற துணையாகத் திகழும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பொதுமக்கள் மாடுகளை குளிப்பாட்டியும், கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்தும் அலங்கரித்தனர். பின்னர் கரும்பு, மஞ்சள், காய்கறிகள் வைத்து, குடும்பம், குடும்பமாக மாட்டுப் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தனது குடும்பத்தினருடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடினார். திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டு வேட்டி, சட்டையுடன் கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.







