நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்களுக்கு நூலுரிமைத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை இராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டதால், ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
மறைந்த தமிழறிஞர்கள் நெல்லை கண்ணன் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் (எ) நாகலிங்கம் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சோமலெ நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், முனைவர் ந. இராசையா நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தஞ்சை பிரகாஷ் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், அவர்களின் மரபுரிமையரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார்.