தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளை தமிழர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் தமிழர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் தமிழர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வேயில் 964 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் கூடுதலான இடங்களில் வெளிமாநிலத்தவர்களே தேர்வாகியிருப்பது இயற்கை நீதிக்கு முரணானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுத் தேர்வர்கள் மிகக் குறைந்த அளவிலேயே தேர்வாகியிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது எழுப்புவதாக கூறியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்படும் வகையில் 100 சதவீதம் மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் பணியிடங்களில் 50 சதவீதம் மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெருநிறுவனங்களின் அமைப்பு சார்ந்த பணிகளில் 80 சதவீதத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.